லண்டன் ஒலிம்பிக் போட்டி : ஓர் பார்வை

   ண்டன் ஒலிம்பிக் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று, பதிநான்கு தங்கப் பதக்கங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் மகளிர் வில்வித்தை குழுப் போட்டிக்கான தங்கத்தை தொடர்ந்து ஏழாவது முறையாக தென்கொரியா கைப்பற்றியது. மகளிருக்கான 100 மீட்டர் பட்டர் ஃபிளை நீச்சல் போட்டியில் அமெரிக்க வீராங்கனை டனா வால்மெர், உலக சாதனை படைத்தார்.
வில்வித்தைப் போட்டி
மகளிர் குழு வில்வித்தைப் போட்டிகள் நேற்று நடைபெற்றன. இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த தென் கொரிய மகளிரணியை எதிர்த்து சீனா விளையாடியது. தென் கொரிய அணியில், கீ போ பே, லீ சுங் ஜின், சோய் ஹூன் ஜூ  இடம்பெற்றிருந்தனர். சீன அணியில், செங் மிங், சூ ஜிங், ஃபங் யு டிங் பங்கேற்றனர்.
தங்கப்பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தென் கொரிய மகளிரணி, 210-209 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இக்கட்டான நேரத்தில் தென் கொரிய வீராங்கனை கீ போ பே, 9 புள்ளிகள் பெற்றும் வெற்றிக்கான அம்பை எய்து தங்கப்பதக்கத்தை உறுதி செய்தார்.
இதன் மூலம் தொடர்ந்து 7வது முறையாக தென் கொரிய அணி மகளிர் வில்வித்தை குழுப் போட்டிக்கான தங்கப் பதக்கத்தை வென்றது.
நீச்சல் போட்டி
மகளிருக்கான தனி நபர் 100 மீட்டர் பட்டர்ஃபிளை நீச்சல் போட்டியில், அமெரிக்க வீராங்கனை டானா வால்மெர் புதிய உலக சாதனை படைத்து தங்கப்பதக்கத்தை வென்றார். நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், 55 புள்ளி 98 விநாடிகளில் பந்தய தூரத்தை வால்மெர் கடந்தார். இதன் மூலம் ஸ்வீடனைச் சேர்ந்த சாரா, கடந்த 2009ம் ஆண்டு ரோமில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் சாதனையை அவர் முறியடித்தார். சீன வீராங்கனை லூ யிங் வெள்ளிப் பதக்கத்தையும், ஆஸ்திரேலியாவின் அலிசியா வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
துப்பாக்கி சுடுதல்
மகளிருக்கான ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில், அமெரிக்க வீராங்கனை கிம் ரோடே, தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில், 100 இலக்குகளில் 99 இலக்குகளை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தினார். வெள்ளிப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை வீ நிங், 91 இலக்குகளை மட்டுமே சுட்டார். இப்போட்டியில் ஸ்லோவேகியாவின் பார்டேகோவா வெண்கலப் பதக்கம் வென்றார்.
1996, 2004 ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற கிம் ரோடே, லண்டன் ஒலிம்பிக்கிலும் தனது ஆதிக்கத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
இதேபோல் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில், சீன வீராங்கனை வென் ஜுன் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர் 488 புள்ளி ஒரு புள்ளிகள் பெற்று, 2008 ஒலிம்பிக் சாம்பியன் பட்டத்தையும் தக்க வைத்துக் கொண்டார். ஃப்ரான்ஸ் வீராங்கனை செலீனும், உக்ரைன் வீராங்கனை ஓலீனாவும் 486 புள்ளி ஆறு புள்ளிகள் பெற்றதால் ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் செலீன்  வெள்ளிப் பதக்கமும், ஒலீனா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.