ஒலிம்பிக் டென்னிஸ்: சோம்தேவ் தோல்வி

   லண்டன் ஒலிம்பிக், ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில், இந்திய வீரர் சோம்தேவ் தேவ் வர்மன், பின்லந்து வீரரிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
இப்போட்டியின் தொடக்கம் முதலே, பின்லந்து வீரர் ஜார்கோவை எதிர்கொள்ள முடியாமல் சோம்தேவ் திணறினார். இதன் காரணமாக முதல் செட்டை மூன்றுக்கு ஆறு என்ற புள்ளிக்கணக்கில் பறிகொடுத்தார். இரண்டாவது செட்டில், ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற புள்ளிக் கணக்கில் ஜார்கோ முன்னிலையில் இருந்தபோது மழை குறுக்கிட்டதால், சற்று நேரம் ஆட்டம் தடைபட்டது. பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது மிகவும் உத்வேகத்துடன் விளையாடிய ஜார்கோ, அதனை ஆறுக்கு ஒன்று என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக கைப்பற்றினார். இதன் மூலம் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
கடந்த நவம்பர் மாதம் தோள்பட்டை காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட சோம்தேவ், அதன் பின்னர் பங்கேற்கும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். இதனிடையே, நேற்று நடைபெறுவதாக இருந்த பூபதி, போப்பண்ணா ஜோடியின் இரட்டையர் பிரிவு ஆட்டம் மழை குறுக்கீடு காரணமாக இன்று நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்றொரு இரட்டையர் ஜோடியான பயஸ் – விஷ்ணு வர்தன் ஜோடியும் இன்று விளையாடுகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் விளையாட விஷ்ணு வர்தன் தகுதி பெற்றுள்ளார்.
-இணைய செய்தியாளர் - A.R.விஸ்வநாதன்