இந்தியா- நியுசிலந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி, சென்னையில் இன்று நடைபெறுகிறது. முதல் ட்வெண்டி ட்வெண்டி போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இந்தபோட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கூடுதலாக உள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடத்த திட்டமிடப்பட்ட முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய -நியுசிலந்து அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணயளவில் தொடங்குகிறது.
ஷேவாக், கம்பீர், கோஹ்லி, ரெய்னா, கேப்டன் தோனி என இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிக வலுவாக இருக்கிறது. பந்து வீச்சை பொறுத்தவரை ஸகீர் கான், இர்பான் பதான் ஆகியோரின் அனுபவம் இந்திய அணிக்கு பலமாக உள்ளது. உள்ளூர் நாயகனான அஷ்வினும் களமிறங்க வாய்ப்புள்ளது.
இதேபோல் பல மாதங்கள் இடைவேளைக்கு பின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள ஹர்பஜன் சிங்கும் இன்றைய போட்டியில் களமிறக்கப்படலாம். இவற்றையெல்லாம் தாண்டி, புற்றுநோயை வென்று மீண்டும் அணியில் இடம்பெற்ற அதிரடி மன்னன் யுவராஜ் சிங்-கின் ஆட்டத்தை காணவும் ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.
இந்தியாவுக்கு சவால் அளிக்கும் நியுசிலந்துஇருபது ஓவர் ஆட்டங்களில் நியுசிலந்து அணியும் வலுவானதாகவே இருக்கிறது. இந்தியாவுடன், இதுவரை நடைபெற்றுள்ள மூன்று இருபது ஓவர் போட்டிகளிலும் அந்த அணியே வெற்றி பெற்றுள்ளது. கேப்டன் ராஸ் டெய்லர், மெக்கல்லம் ஆகியோரின் அதிரடி ஆட்டமும், அனுபவ வீரர் டேனியல் வெட்டோரியின் சுழற்பந்து வீச்சும் அந்த அணிக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் ஆல் ரவுண்டர்களான ஜேக்கப் ஓரம், ப்ராங்களின் ஆகியோரும் அந்த அணியின் பலமாக உள்ளனர். இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். வரும் 18ம் தேதி இலங்கையில் தொடங்கவுள்ள இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு, சிறந்த பயிற்சியாக இருக்கும் என்பதால், இரு அணிகளுக்கும் இந்தப்போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-B.R.விஸ்வநாதன்