இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் இன்று பலப்பரீட்சை

  ருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பட்டத்தை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இலங்கை அணி இன்று எதிர்கொள்கிறது.
இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் இந்தப்போட்டி இந்திய நேரப்படி இரவு ஏழு மணியளவில் தொடங்குகிறது.
மாயாஜால பந்துவீச்சை காட்டி, அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணியும்,  அதிரடி பேட்டிங்கால் ஆஸ்திரேலிய அணிக்கு பேரிடியை காட்டி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியும் பட்டத்திற்கான போட்டிக்காக ஆயத்தமாகிவிட்டன.
இலங்கை அணியை பொறுத்தவரை அந்த அணியின் அனுபவ பேட்டிங் வரிசை எதிரணியின் பந்துவீச்சை தகர்க்கக்கூடியதாக உள்ளது. முதல் மூன்று வீரர்களாக களமிறங்கும் கேப்டன் ஜெயவர்த்தனே, தில்ஷன், சங்ககரா ஆகிய மூன்று பேருமே இருபது ஓவர் போட்டிகளில் ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்த சாதனையாளர்களாக திகழ்கின்றனர். அஜந்தா மென்டிஸ்-சின் சுழற்பந்து வீச்சும், மலிங்காவின் வேகப்பந்து வீச்சும் அந்த அணிக்கு பக்கபலமாக உள்ளது.
இது தவிர்த்து ஏஞ்சலோ  மேத்யூஸ், திஷாரா பெரேரா, ஜீவன்  மென்டிஸ் ஆகிய சிறந்த ஆல்ரவுண்ட் ஆட்டக்காரர்களும் அந்த அணியில் உள்ளனர். ஏற்கனவே நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்திருப்பதும், உள்நாட்டில் விளையாடுவதும் அந்த அணிக்கு உளரீதியான தெம்பை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை அந்த அணி அதிகம் நம்பியிருப்பது கிறிஸ் கெய்லின் அதிரடி தொடக்கத்தை தான்.  இந்தத்தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ள கெய்ல், மீண்டும் அதிரடி ஆட்டத்தை காட்டி விட்டால், அதேபாணியை பின்பிற்றுவதில் பின்னால் வரும் வீரர்களுக்கு சிரமமிருக்காது.
இதுமட்டுமல்லாது மார்லன் சாம்வேல்ஸ், ப்ராவோ, பொல்லர்ட், கேப்டன் சம்மி, என அதிரடி பட்டாளமாகவே வெஸ்ட் இண்டீஸ் அணி காட்சியளிக்கிறது
ராம்பால், சுனில் நரைன், பத்ரி ஆகிய பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.  கடந்த போட்டியில் சிறப்பாக செயல்படாத ரஸ்ஸலுக்கு பதிலாக மற்றோரு ஆல் ரவுண்டரான ட்வைன் ஸ்மித் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் இருபது ஓவர் உலகக்கோப்பையில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குவதால் இறுதியாட்டத்தில் அனல் தெறிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.