கிராண்ட்ஸ்லாம் மாஸ்டர்ஸ் ஆனந்துக்கு 5-வது இடம்

  ஸ்பெயினில் நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் மாஸ்டர்ஸ் ஃபைனல் செஸ் தொடரில், நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். உலக சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், 5-வது இடத்தையே பிடித்துள்ளார்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற 10-வது மற்றும் இறுதி சுற்றில் ஆட்டத்தில், ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் செர்ஜி கரியாகினுடன் ஆனந்த் விளையாடினார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்ததால் இருவருக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. 6 வீரர்கள் பங்கேற்ற இந்த செஸ் தொடரில், 9 புள்ளிகளுடன் விஸ்வநாதன் ஆனந்த், 5-வது இடத்தை பிடித்தார். முதல் 8 சுற்றுகளையும் டிரா செய்த விஸ்வநாதன் ஆனந்த், 9-வது சுற்றில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனிடம் தோல்வியடைந்தார்.
இந்த தொடரில் இத்தலியின் ஃபேபியானோ கருவனா, நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் தலா 16 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனால், இவர்கள் இருவரும் மோதிய 10-வது சுற்று ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால், அந்த சுற்றுப் போட்டியும் டிரா ஆனதால், இருவரும் தலா 17 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இதனால் சாம்பியனை தீர்மானிக்க டைபிரேக்கர் சுற்று நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய நார்வே வீரர் கார்ல்சன், 2-க்கு பூஜ்ஜியம் என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.                                                         -B.R.விஸ்வநாதன்