ஷாங்காய் மாஸ்டர்ஸ்: பயஸ் ஜோடி சாம்பியன்

      ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பூபதி ஜோடியை வீழ்த்தி, பயஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின், ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக் குடியரசின் ரடேக் ஸ்டெபானிக் ஜோடி, இந்தியாவின் மஹேஷ் பூபதி- ரோஹன் போபண்ணா ஜோடியை எதிர்கொண்டது.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டியில் முதல் செட் ஆட்டம் டை- பிரேக்கர் வரை சென்றது. அந்த செட்டை பூபதி-போபண்ணா ஜோடி 7-6 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றியது. ஆனால், இரண்டாவது செட்டை 3-6 என்ற புள்ளிகளில் எளிதில் இழந்தது. இதனால், மூன்றாவது செட்டில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் முனைப்பில், இரு ஜோடிகளும் ஆர்வம் காட்டின.
இறுதியில் பயஸ்-ஸ்டெபானிக் ஜோடி, 10-5 என அந்த செட்டை கைப்பற்றி கோப்பையை வென்றது. லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பயஸூடன் இணைந்து விளையாட மாட்டோம் என தெரிவித்திருந்த பூபதி-போபண்ணா ஜோடி, தற்போது முதன்முறையாக பயஸ்-ஸ்டெபானிக்கை எதிர்த்து களத்தில் மோதியது.                                                       -B.R.விஸ்வநாதன்