கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது டேர்டெவில்ஸ்

  தென்னாப்பிரிக்காவில் நேற்று தொடங்கிய சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் ஏ பிரிவு ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, டெல்லி டேர்டெவில்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாத்தில் தோற்கடித்தது. டேர்டெவில்ஸ் அணியின் வேகப் பந்து வீச்சுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் நைட்ரைடர்ஸ் ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து வீழ்ந்ததால், 108 ரன்களுக்கு அந்த அணி சுருண்டது.
தென்னாப்பிரிக்காவிலுள்ள செஞ்சூரியன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. டேர்டெவில்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெயவர்த்தனவும், சேவக்கும் வழக்கத்துக்கு மாறாக, நிதானமாக ரன் சேர்த்தனர். அவர்களுக்குப் பிறகு வந்த உன்முக் சந்த் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோர் அதிரடியாக ஆட, 20 ஓவர் முடிவில் டேர்டெவில்ஸ் அணி 160 ரன் சேர்த்தது. அதிகபட்சமாக உன்முக் சந்த், 40 ரன் எடுத்தார்.
பின்னர் பந்துவீச்சைத் துவக்கிய, டேர்டெவில்ஸ் அணியின் இர்பான் பதான், மோர்கல், அகர்கர் ஆகியோரின் வீச்சில் பொறி பறந்தது. அதனால், நைட் ரைடர்ஸ் அணி, 3 ரன்களைச் சேர்ப்பதற்குள்ளாக, அந்த அணியின் முதல்வரிசை ஆட்டக்காரர்களான பிஸ்லா, கம்பீர், மெக்கல்லம் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
திவாரி மட்டும் நிலைத்து நின்று 33 ரன்களைச் சேர்த்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர் முடிவில், நைட் ரைடர்ஸ் அணி 108 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் 52 ரன்கள் வித்தியாசத்தில் டேர்டெவில்ஸ் அணி வெற்றி பெற்றது. 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அந்த அணியின் இர்பான் பதான், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.