சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்
அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல்
வெற்றியை பெற்றது.
ஜோகன்னர்ஸ்பர்க் நகரில் நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்
அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட் செய்யும் படி கேட்டுக் கொண்டது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முரளி விஜயும், டூ பிளசிஸ்சும்
அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்தனர். முரளி விஜய் 39
ரன்களிலும், டூ பிளசிஸ் 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் டோனி தன்
பங்கிற்கு விரைவாக 35 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில்
வெளியேறினர். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 173
ரன்கள் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் மலிங்கா 5 விக்கெட்டுகள்
வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய மும்பை அணியில் டெண்டுல்கர் 2 ரன்களில் அவுட் ஆகி
ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார். ரோஹித் சர்மா சிறிது நேரம்
தாக்குப்பிடித்து 32 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்
ஆகி வெளியேறினாலும் தினேஷ் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தை
வெளிப்படுத்தினார்.
இறுதிக் கட்டத்தில் தினேஷ் கார்த்திக்கும் பொல்லார்டும் அதிரடியாக
விளையாடி சென்னை அணிக்கு நெருக்கடி தந்தனர். இறுதியில் அந்த அணி 7 விக்கெட்
இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை
தழுவியது. சாம்பியன்ஸ் லீக் தொடரில் முதல் வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ்
அணி பதிவு செய்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் இடம் பெற்றுள்ள பி பிரிவில் சி்ட்னி சிக்ஸர்ஸ்
மற்றும் லயன்ஸ் அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டன. எஞ்சிய
இன்னொரு போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றாலும், அது ஆறுதல் வெற்றியாக
சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு அமையும்.