இந்தியா – இங்கிலந்து 2வது டெஸ்ட் : டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

        இந்தியா – இங்கிலந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெறுகிறது. வாங்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
காயம் காரணமாக இளம் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இரண்டாவது டெஸ்ட்டில் களமிறங்கவில்லை. அவருக்குப் பதிலாக வைரஸ் காய்ச்சலில் இருந்து  குணமடைந்துள்ள இஷாந்த் ஷர்மா களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்பஜன் சிங் களம் இறக்கப்பட்டுள்ளார்.
இந்த போட்டி அதிரடி வீரர் சேவாக்கிற்கு 100- ஆவது போட்டியாகும். இந்திய அணியைப் பொறுத்தவரை, சேவாக், புஜாரா, கம்பீர்,  யுவராஜ் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடாத சச்சின் டெண்டுல்கர், சொந்த மண்ணில் மீண்டும் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில், அஸ்வின், ஓஜா ஆகிய இருவரும் இங்கிலந்து அணிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இங்கிலந்து அணியை பொறுத்தவரை கேப்டன் குக், சுழற்பந்து வீச்சாளர் க்ரீம் ஸ்வான் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த போட்டியில் இங்கிலந்து வேகப்பந்து வீச்சாளர்கள் சாதிக்க தவறியதால், இந்த ஆட்டத்தில்  மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான மாண்டி பனேசரும் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்தியா ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
-விஸ்வநாதன்