வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது மேற்கு இந்திய தீவுகள் அணி

          வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என மேற்கிந்திய தீவுகள் கைப்பற்றியுள்ளது.
வங்கதேசத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் என்ற நேற்றைய ஸ்கோருடன், இன்றைய கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்தது வங்கதேச அணி. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அந்த அணி மளமளவென 4 விக்கெட்டுகளை இழந்து, 287 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸை இழந்தது.
இதன்மூலம் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது மேற்கிந்திய தீவுகள் அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் கெய்ல் 20 ரன்களும், கீரன் பாவெல் 9 ரன்களும் எடுத்து அணிக்கு வெற்றி தேடி தந்தனர்.
முன்னதாக முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணி 648 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. சாமுவேல்ஸ் இரட்டை சதமும், பிராவோ, சந்தர்பால் ஆகியோர் தலா சதமும் விளாசியிருந்தனர்.
வங்கதேச அணி 387 ரன்கள் எடுத்திருந்து. அந்த அணியின் அறிமுக வீரர் அபுல் ஹசன் சதம் விளாசினார். இந்தப் போட்டியில் இரட்டை சதம் விளாசிய மேற்கிந்திய தீவுகள் அணியின் சாமுவேல்ஸ் ஆட்டநாயகன் விருதையும், சந்தர்பால் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அந்நாட்டுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரு டிவென்டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது
-விஸ்வநாதன்