இங்கிலந்து அணி 413 ரன்னில் ஆட்டமிழந்தது

             இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குக்-பீட்டர்சென் ஆகியோரின் சதத்தால், முதல் இன்னிங்ஸில் 413 ரன்கள் குவித்தது இங்கிலந்து அணி.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், 2 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் என்ற நேற்றைய ஸ்கோருடன், இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது இங்கிலந்து அணி.
அந்த அணியின் கேப்டன் அலெஸ்டர் குக் 87 ரன்களுடனும், கெவின் பீட்டர்சென் 62 ரன்களுடனும் ஆட்டத்தை தொர்ந்தனர். சிறிது நேரத்திலேயே கேப்டன் குக் சதம் விளாசினார். இது அவரது 22-வது டெஸ்ட் சதம் ஆகும். டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற நான்கு போட்டிகளிலும் தொடர்ந்து சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் குக். கெவின் பீட்டர்சென்னும், தனது 22-வது டெஸ்ட் சதத்தை விளாசினார்.
இந்தியாவுக்கு எதிராக கெவின் பீட்டர்சென் எடுக்கும் 6-வது டெஸ்ட் சதம் இதுவாகும். குக்-பீட்டர்சென் ஜோடி 206 ரன்கள் குவித்து, வான்கடே மைதானத்தில் அதிக ரன் குவித்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது.
பின்னர் 122 ரன்கள் எடுத்த கேப்டன் குக், அஷ்வினின் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து வந்த பெய்ர்ஸ்டோ 9 ரன்களிலும், சமித் பட்டேல் 26 ரன்களிலும் ஓஜாவின் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த கெவின் பீட்டர்சென்-னை, 186 ரன்களில் வெளியேற்றினார் ஓஜா. இதைத்தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்ததால், அந்த அணி முதல் இன்னிங்கிஸில் 413 ரன்கள் எடுத்தது. ப்ரக்யான் ஓஜா 5 விக்கெட்டுகளும், அஷ்வின், ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய அணியை விட இங்கிலந்து அணி முதல் இன்னிங்ஸில் 86 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 327 ரன்கள் எடுத்திருந்தது.
-விஸ்வநாதன்