உலக மகளிர் ஸ்குவாஷ் போட்டி : காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியா முன்னேற்றம்

           ஃப்ரான்ஸில் நடைபெற்று வரும் உலக மகளிர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது. G பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் அர்ஜெண்டின அணியை எதிர்கொண்டது.
இதில் இந்திய வீராங்கனைகள் தீபிகா பள்ளிகள், அனகா அலங்காமோனி, ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் தாங்கள் எதிர்கொண்ட அர்ஜெண்டின வீராங்கனைகளை வீழ்த்தினர். இதன் மூலம் மூன்று – பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய அணி அயர்லந்தை இரண்டு – ஒன்று என்ற கணக்கில் தோற்கடித்தது.
தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதில் இந்திய வீராங்கனைகள், நெதர்லந்து அணியை எதிர்கொள்கின்றனர். அணிப் போட்டியான இதில் ஆஸ்திரேலியா, கனடா, ஸ்பெயின், அமெரிக்கா உட்பட 26 நாடுகள் பங்கேற்கின்றன. மொத்தம் 8 பிரிவுகளாக இந்த அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்திய அணி G குரூப்பில் அயர்லந்து மற்றும் அர்ஜெண்டினாவுடன் இடம்பெற்றது. ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும். உலக மகளிர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
-சத்திஷ் K.  K.K.nagar