விளம்பரங்களிலும் தோனிக்கு சறுக்கல் விளம்பர ஒப்பந்தங்கள் பறிபோகின்றன

           மோசமான தோல்விகளால், இந்திய கிரிக்கெட் அணி தலைவர் மஹேந்திர சிங் தோனி, காரசாரமான விமர்சனங்களில் சிக்கித் தவிக்கும் நிலையில், அவரது வணிக ஒப்பந்தங்களும் இப்போது ஆட்டம் கண்டுள்ளன.
நடப்பு ஆண்டு தொடக்கத்தில் தோனி 43 நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றிய நிலையில், இப்போது அது 28 ஆக குறைந்துள்ளது. இது மக்களிடையே அவரது புகழ் குறைந்து வருவதைக் காட்டுவதாக விளம்பரத் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படும் பட்சத்தில், அவரது புகழ், மேலும் சரிந்து, தோனி என்ற பிராண்ட்-இன் மதிப்பு 25 முதல் 30 சதவீதம் வரை சரியும் என இத்துறையில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், இதற்கு நேரெதிர் கருத்துக்களும் உள்ளன. தோனி, தொடர்ச்சியாக பல போட்டிகளில் ஆட வேண்டியிருப்பதால், பல ஒப்பந்தங்களை அவர் புதுப்பிக்கவில்லை என்றும், பெப்சி போன்ற பெரிய நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை மட்டுமே புதுப்பித்துக்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்திய விளம்பரத் துறையில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரராக தோனி திகழ்ந்து வருகிறார்.
பெப்சி, டிவிஎஸ், ரீபோக், ஏர்செல், டைட்டன் என பல நிறுவனங்களுடன் தோனி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். இதன் மூலம், தோனிக்கு ஆண்டுக்கு 200 கோடி வருவாய் கிடைக்கிறது.
-விஸ்வநாதன்