கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இந்திய அணிக்கு வெற்றி


     இங்கிலந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை ஈட்டியது இந்திய அணி.
அதிரடியாக விளையாடிய இளம் வீரர் விராட் கோஹ்லி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். 
கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில், புதிதாக கட்டப்பட்ட மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால், இங்கிலந்து அணி 155 ரன்களுக்கு சுருண்டது.
156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணயின் தொடக்க ஆட்டக்காரர் ரஹானே ரன் எதுவும் எடுக்காத நிலையில், ஸ்டீவன் ஃபின்-னின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதன்பின்னர் கம்பீர் சீரான வேகத்தில் ரன்கள் சேர்க்க, விராட் கோஹ்லி அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார்.
33 ரன்களில் ட்ரெட்வெல்லின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார் கம்பீர். சிறப்பாக விளையாடிய விராட் கோஹ்லி ஒருநாள் கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்ததோடு, 22 - ஆவது அரைசதத்தையும் பூர்த்தி செய்தார்.
விராட் கோஹ்லியுடன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய யுவராஜ் சிங் 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். 28 ஆவது ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி வெற்றி இலக்கை ஈட்டியது.
                              -இணைய செய்தியாளர் - s.குருஜி