தோனி இரட்டை சதம்


  
 சென்னை டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோனி இரட்டை சதமடித்து சாதனை படைத்துள்ளார்.
  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப்போட்டியில், 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் என்ற நிலையில், இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்தது. 71 ரன்களுடன் களமிறங்கிய சச்சின், மேலும் 10 ரன்கள் சேர்த்து, நேதன் லைனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
  அதனைத் தொடர்ந்து, விராட் கோலியுடன் , கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராத் கோலி 107 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சதமடித்த கேப்டன் தோனி பின்னர் ஆஸ்திரேலிய பந்துவீச்சை நாலாபுறமும் விளாசி இரட்டை சதத்தையும் நிறைவு செய்தார்.
  74 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி அடித்த முதல் இரட்டை சதம் இதுவாகும். மேலும், டெஸ்ட் போட்டியில் 4 ஆயிரம் ரன்களையும் தோனி கடந்தார். இதற்கு முன் கடந்த 1993-ம் ஆண்டு முன்னாள் இந்திய கேப்டன் அசாருதின் டெஸ்ட் போட்டியில் 163 ரன்கள் எடுத்ததே இந்திய அணி கேப்டன் ஒருவரின் அதிகபட்ச சாதனையாக இருந்தது.
  தற்போது தோனி அந்த சாதனையை முறியடித்ததோடு இரட்டை சதமும் அடித்து அசத்தியுள்ளார். சென்னையில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 500-ரன்களை கடந்து வலுவான நிலையில் உள்ளது.


*********************************************************************************